இலங்கையின் கல்வித்துறையில் பெரும் பங்காற்றிய பேராசிரியர் சோ.சந்திரசேகரன் காலமானார்.
திடீர் மாரடைப்பு காரணமாக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை தனது 77 ஆவது வயதில் அவர் காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பதுளை ஊவா கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை பயின்ற அவர், பின்னர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் உயர் கல்வியை தொடர்ந்திருந்தார்.
இதேவேளை 1963ஆம் ஆண்டு பேராதனை, மற்றும் ஜப்பான் ஹிரோசிமா பல்கலைக்கழகங்களில் தமது பட்டபடிப்பினை பூர்த்தி செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர், பேராதனை பல்கலைகழகத்தின் போதனா ஆசிரியர், இலங்கை மத்திய வங்கியின் மொழிப்பெயர்ப்பாளர், ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் கடமையாற்றியுள்ளார்.
அதேபோன்று, இலங்கையில் தமிழர் கல்வி, புதிய நூற்றாண்டுக்கான கல்வி, இலங்கை இந்தியர் வரலாறு போன்றவற்றுடன் மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பான பல நூல்களையும் சந்திரசேகரன் எழுதியுள்ளார்.