இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமூக வலைத்தளங்களை முடக்கும் தீர்மானத்தை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு முதல் இலங்கையில் பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிக்க முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமையவே அவற்றை முடக்கியுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ”சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்-விபிஎன் கிடைப்பது – தற்போது நான் பயன்படுத்துவதுபோல-அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயத்தில் அதிகாரிகள் மேலும் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும் என்பதுடன், சமூகஊடகங்களை முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.