இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை எனவும், அந்த செய்திகளை முற்றாக நிராகரிப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற ‘இந்தோ – ஶ்ரீலங்கா’ ஒன்றிணைந்த போர் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தியே தற்போது அந்த செய்திகள் பரப்பப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பல்வேறு நோக்கங்களுடன் பகிரப்படும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்கள் தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எந்தவொரு நிலைமைக்கும் முகங்கொடுப்பதற்கு முப்படையினருக்கு இயலுமை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்திய படைகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயமும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது