
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அருண் சித்தார்த் தலைமையிலான அரச தரப்பு ஆதரவாளர்கள் குழுவொன்று இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையினாலேயே அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
”பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திரமுனை நோக்கிய பேரணி” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியை சேர்ந்த ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் உமாச் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இவர்களின் பேரணி யாழ். மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த போது, அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
இதன்போது இருதரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது. இதன்போது சிலர் காயமடைந்துள்ளனர்.
குழப்பத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அங்கிருந்து பாதுகாப்பாக முச்சக்கர வண்டியில் அனுப்புவதற்கு முயற்சித்தவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முச்சக்கர வண்டியையும் கடுமையாகத் தாக்கினர். பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பொலிஸார் அவர்களை அழைத்துச் சென்றனர்.