இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியான தகவல்களை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கூறியுள்ள மகிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலம் முடியும் வரையில் பிரதமர் பதவியில் தொடருவேன் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தனது சமையல்காரர்களிடம் புதிய பிரதமருக்கு உணவுப் பரிமாற தயாராகுங்கள் என்று கூறியுள்ளதாக வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டே ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் அதனை மறுத்துள்ள பிரதமர், “எனக்கு இன்னும் காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் பற்றிய ஊகங்கள் அனைத்தும் பொய்” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணிலுடனோ அல்லது சஜித்துடனோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.