சர்வதேச நாணய நிதியத்தை அணுகும் விடயத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, அண்மைக்காலமாக இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை விளக்கிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தை அணுகும் விடயத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வேளையில், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டிய ஜூலி சங், இது நீண்டகால அடிப்படையில் இந்நாட்டுக்கு முக்கியமானதொன்றாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எந்தவித பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் திஜூலி சங், ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.