November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனது தவறை மறைப்பதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையை கையிலெடுத்தது தவறு; மனோவுக்கு சுமந்திரன் பதிலடி

தனது தவறை மூடி மறைப்பதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் மனோகணேசன் ஒப்பிட்டது தவறான ஒரு செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் தானும் கைச்சாத்திட்டதாகவும், அது மூன்று வாரங்களின் முன்னர் நடைபெற்ற சம்பவம் என்றும் ஆனால், அது தற்போது எதிர்பாராத விதமாக வெளிவந்துவிட்டது என்றும் மனோகணேசன் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.

மேலும்,அந்த விடயம் வெளிவந்ததனால் சில சங்கடங்களும் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமையை சமாளிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான ஒரு மனுவை நாங்கள் சேர்ந்து கொடுத்தால் என்ன என என்னிடம் மனோகணேசன் கேட்டார்.

துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் கைச்சாத்திட்டதற்கான காரணத்தையும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். தனிப்பட்ட உரையாடலின் போது, அவர் அந்த காரணத்தை என்னிடம் சொன்னதனால், அதை பகிரங்கமாக சொல்ல நான் விரும்பவில்லை. அரசியல் நாகரிகத்தை அவர் பேணாவிட்டாலும், அந்த நாகரிகத்தை பேண நான் விரும்புகின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் சொன்னது, துமிந்த சில்வாவின் மனுவில் கையொப்பமிட்டதில் இருந்து தப்புவதற்கு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான மனுவை முன்வைத்தால் என்ன என்று கேட்டார்.

அதற்கு நான் மறுத்துவிட்டேன். மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணத்தையும் நான் சொல்லியிருந்தேன். அவர் சொல்வதைப் போன்று, இந்த நேரத்தில் அது தேவையில்லை என நான் சொல்லவில்லை. அது தவறானது.

தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படுவது சரியான விடயம். அது செய்யப்பட வேண்டிய விடயம். துமிந்த சில்வாவை விடுதலை செய்வது தவறான விடயம்.

ஆகையினால், செய்யப்படகூடாத விடயத்தையும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயத்தையும், ஒன்றாக காட்டுவது, மிக மிகத் தவறான செயற்பாடு. சுனில் ரத்னாயக்காவிற்கு மன்னிப்பு கொடுக்கப்பட்ட போது கூட, தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் தானே என்றதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன்.

இந்த இரண்டு விடயங்களையும் சேர்க்ககூடாது. சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டது தவறான செயல். தவறான செயலை வைத்து, சரியான செயலை செய்வதற்கு, தவறான செயலையும், சரியானதென சொல்வதாக ஆகிவிடும்.

எனவே, சுனில் ரத்னாயக்காவின் விடுதலை தொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம். தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, இந்த தவறான செயலுடன் சேர்க்க கூடாது. அவர்கள் கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். அது வேறு விடயம்.

மனோகணேசன், ஞானசார தேரர் சிறையில் இருந்த போது, அவரை சிறையில் சென்று பார்வையிட்டு, அதன்பின்னர், அவர் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்.

பிள்ளையானை சிறையில் கண்டு வந்தவர். ஞானசார தேரர், பிள்ளையான், சுனில் ரத்னாயக்க, துமிந்தசில்வா ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

தமிழ் அரசியல் கைதிகள் என நாங்கள் அடையாளப்படுத்துபவர்கள், கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே, தவறான ஒரு விடயத்தையும், சரியான ஒரு விடயத்தையும், முடிச்சுப் போட வேண்டாம் என நான் அவரிடம் சொல்லியிருந்தேன்.

அவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு இணங்கமுடியாதென்று நான் அவருக்கு தெளிவாக சொல்லியிருந்தேன். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை.தவறான செயலை செய்ததில் இருந்து தான் தப்புவிக்க வேண்டும் என்று, அதனை ஒரு கருவியாக பயன்படுத்த நினைப்பது ஒரு தவறான செயற்பாடு. அதற்கு இணங்கிப் போகக்கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு.

நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் யோசித்துவிட்டுச் சொல்வதாக, தன்னிடம் கூறியதாக, மனோ கணேசன் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

ஆனால், அடைக்கலநாதன், தான் அவ்வாறு சொல்லவில்லை. இரண்டு விடயங்களையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என தெளிவாக சொன்னதாக, ஊடகங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் இன்று காலை தெரிவித்தார்.

மனோகணேசன், துரதிஸ்டவசமாக, தான் அகப்பட்ட அரசியல் சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக, இவ்வாறு பேசுவது பிழையான ஒரு விடயம். அவர் என்னிடம் தனிப்பட்ட விடயமாக பேசியதனால், சில விடயங்களை வெளிப்படுத்தவில்லை.

நாங்கள் தெரிவித்ததாக மனோகணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமையினால், நானும், அடைக்கலநாதனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக, தெளிவான நிலைப்பாட்டை சொல்லியிருக்கின்றோம். அந்த தேவை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது என்று சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.