மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் உள்ள தடைகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே பிரதமர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இந்த அமைச்சகத்திற்குரிய தேசிய திட்டமிடல் துறை, மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், கொள்கை கற்கைகள் நிறுவனம், நிலையான அபிவிருத்தி சபை, கட்டுபாட்டாளர் நாயகம் அலுவலகம், மதிப்பீட்டுத் திணைக்களம், இலங்கை கணக்குகள் மற்றும் தணிக்கை தரநிலைகள் கணக்கெடுப்பு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பயனாளிகள் சபை ஆகிய நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
எரிபொருளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்திற்கு 60 ரூபாய்க்கு மேல் செலவாகும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரம் குறைந்தபட்சம் 20 ரூபாய்க்குக் கிடைக்கும் என்றும் தெரியவந்தது.
அதற்கமைய மின் நெருக்கடியைத் தீர்க்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைத் தவிர வேறு வழியில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிரதான விநியோகத்துடன் இணைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகள் தாமதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய மின் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் எனவும், மின்சார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தடையில்லா மின்சாரம் விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.