File Photo
அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்மாதிரியாக நடந்துகொள்ளுமாக இருந்தால் தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கு தயார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதற்காக அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்தார்.
அதன்போது அவர், ”சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இருக்கின்றனர். அவர்கள் அதில் இருந்து விலகி அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முன்மாதிரியாக இருப்பார்களாக இருந்தால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு முன்மாதிரியாக இருக்க நான் தயாராக இருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.