ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெற்றது.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை. சேனாதிராஜா, புளோட் தலைவர் சித்தாத்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் மற்றும் த. கலையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நீதி அமைச்சர் அலிசப்ரி, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, அரசியல் தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், வடக்கு கிழக்கின் அபிவிருத்தி குறித்தும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இன்னல்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதிக்கு கூட்டமைப்பினர் எடுத்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல மாதங்களாக கோரிக்கை விடுத்த வந்த நிலையில், கடந்த வாரத்தில் சந்திப்பை நடத்துவதற்கு முன்னர் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக அந்த சந்திப்பு இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.