இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு கால அளவு, எதிர்வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தற்போது அமுல்படுத்தப்படும் ஐந்தரை மணித்தியால மின்வெட்டு 10 மணித்தியாலங்கள் வரையில் அதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளதால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம் என்று மின்சாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அனல் மின்நிலையங்களுக்கு போதுமான எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியுடன் தொடர்புடைய பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.