ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து, பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வகையில், அரசியலமைப்பில் புதிய திருத்தத்தை கொண்டு வருவதற்கான தனிநபர் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பாராளுமன்ற விஜேதாச ராஜபக்ஷ எம்.பி தீர்மானித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தமாக அமையும் வகையில், அது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தனது பிரேரணை தொடர்பான அறிவித்தலை பாராளுமன்ற செயலகத்தில் அவர் சமர்ப்பித்துள்ளார்.
இந்த திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறுபவராகவும், அவரின் அதிகாரங்கள் அமைச்சரவைக்கு உட்பட்டதாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாராளுமன்றத்தில் எம்.பிக்களின் பெரும்பான்மை வாக்குகளின் மூலம் அவர்களிடையே இருந்து தகுதியானவரை புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கும், அதனுடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் வகையிலும் திருத்தங்களை முன்வைக்க விஜேதாச யோசனைகளை முன்வைத்துள்ளார்.