இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி, இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்தது.
கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வே. ராதாகிருஷ்ணன், உதயகுமார் எம்பி, கே.டி. குருசாமி, பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்திய தரப்பில் தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இலங்கையில் வாழும் தமிழர் ஜனத்தொகையில் சுமார் சரிபாதியான இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் தொடர்பான கூடிய அக்கறையை செலுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய ஒன்றிய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணி கூறியுள்ளது.
இலங்கையின் முழுமைமிக்க குடிமக்களாக ஏனையோருடன் சமத்துவமாக வாழ விரும்பும் மலையக தமிழ் இலங்கையர் தொடர்பான இந்த அதிகாரபூர்வ ஆவணம் மிகவும் பயன்தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மலையக தமிழ் மக்களின் அனைத்து அபிலாசைகளையும் ஒருசேர பிரதிபலிக்கும் கோரிக்கைகள் உள்ளடங்கிய இத்தகையை ஆவணத்தை தயாரித்து முன்வைத்துள்ளமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு பாராட்டுகளையும் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்த அபிலாசை ஆவண கடிதத்தை உடனடியாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அவதானத்துக்கு முறைப்படி அனுப்பி வைப்பதாக தூதுவர் கோபால் பாக்லே, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவுக்கு உறுதியளித்துள்ளார்.