இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை சீர்செய்ய தேவையான உதவிகளை வழங்குவோம் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த விக்டோரியா நூலண்ட், கொழும்பில் இன்று நடைபெற்ற இலங்கை – அமெரிக்க கூட்டு கலந்துரையாடலில் பங்கேற்றார்.
அதன் பின்னர் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸூடன் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பிலும் பங்கேற்றார்.
இந்த ஊடக சந்திப்பில், அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியம் தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.
இதனையடுத்து கருத்துக்கூறிய விக்டோரியா நூலண்ட், “இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு வேண்டிய பங்காளர். இந்த கடினமான சந்தர்ப்பத்தில் நாம் உங்களுக்கு உதவுகின்றோம். எமது பொருளாதார தொடர்புகள் மிகவும் முக்கியமானவை” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை விக்டோரியா நூலண்ட், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இதன்போது, இன்று முற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் ஜனாதிபதி நூலண்டிடம் தெரிவித்துள்ளார்.
அது பற்றி தனது பாராட்டைத் தெரிவித்த உதவிச் செயலாளர், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தான் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வட மாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.