தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில், சர்வகட்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டது.
இதில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொள்ளவில்லை. அத்துடன் ஜே.வி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் மாநாட்டுக்கு சென்றிருக்கவில்லை.
இதேவேளை எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் எம்பிக்கள் சிலரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்த்து இந்த மாநாடு கூட்டப்பட்டது.
இதன்போது, கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் சர்வகட்சி மாநாட்டிற்கு எதிர்காலத்தில் வழங்குவதாகவும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தற்போதைய பொருளாதார நிலைமையை மாநாட்டில் முன்வைத்தார்.
சர்வகட்சி மாநாடு நேர்மையான ஒரு முயற்சி ஆகும். இதில் எந்தவித அரசியல் இலாபமோ குறுகிய நோக்கமோ கிடையாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றதுடன், அதனை தேசிய தேவையாகக் கருதி பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
கலந்து கொள்ளாத ஏனைய கட்சிகளுக்கும் வருகை தந்து, தமது நிலைப்பாட்டை சர்வகட்சி மாநாட்டின் முன்னிலையில் தெரிவிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மீளாய்வு செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்கி பயனுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை அமைக்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.