January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு!

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வகட்சி மாநாடு இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், முற்பகல் 9 மணிக்கு இந்த மாநாடு நடைபெறும்.

சர்வகட்சி மாநாட்டுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள 27 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த மாநாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன.

அத்துடன், எதிர்க்கட்சித் தரப்பில் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்துகொள்ளவுள்ள போதும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கலந்துகொள்ளாது.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்படும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜேவிபி, அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான பிவிதுறு ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகியனவும் பங்குபற்றாது என அறிவித்துள்ளன.

அதேபோன்று, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்க முடிவெடுத்துள்ளது.

இதேவேளை  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியனவும் மாநாட்டில் கலந்துகொள்ளாது.