January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் இலங்கை வந்தார்!

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், இலங்கை வந்துள்ளார்.

இன்று மாலை கொழும்பை வந்தடைந்த விக்டோரியா நுலாண்ட் உள்ளிட்ட குழுவினர், நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

இதேவேளை நாளைய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ள இலங்கை – அமெரிக்கக் கூட்டாண்மை உரையாடலின் 4ஆவது அமர்வுக்கு அமைச்சர் பீரிஸ் மற்றும் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆகியோர் இணைத்  தலைமை வகிக்கவுள்ளனர்.

அத்துடன், துணைச் செயலாளர் நூலன்ட் கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயம் செய்து, வர்த்தக மற்றும் சிவில் சமூகத்தினரை சந்திக்கவுள்ளார்.

இலங்கை – அமெரிக்கக் கூட்டாண்மை உரையாடல் 2019ஆம் ஆண்டு வொஷிங்டனில் நடைபெற்றது.

இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்குமான ஒரு முக்கியமான தளமாக இந்தக் கூட்டு உரையாடல் விளங்குகின்றது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான கொள்கைத் துணைப் பாதுகாப்புச்  செயலாளர் அமண்டா டோரி ஆகியோர் துணைச் செயலாளர் நுலாண்டுடன் விஜயம் செய்துள்ளனர்.