யாழ்ப்பாணத்தில் பிரதமரின் விஜயத்தின் போது, போராட்டம் நடத்த சென்றவர்களை பொலிஸார் வழிமறித்ததால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் பிரதமரினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்காக இன்று முற்பகல், பிரதமர் செல்லும் வீதியில் போராட்டம் நடத்துவதற்காக காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளை சேர்ந்தோர் வாகனங்களில் சென்ற நிலையில், பொலிஸாரினால் அவர்கள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முல்லைத்தீவில் இருந்து பஸ்ஸில் வருகைதந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகில் பொலிஸார் வழிமறித்துள்ளனர்.
அத்தோடு வாகனத்தில் இருந்து எவரையும் இறங்க விடாதவாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நின்ற பொலிஸார் சாரதியையும் கடும் விசாரணைக்கு உட்படுத்தினர்.
இருப்பினும் பேருந்தில் இருந்து கீழிறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.