January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்தவின் வருகையை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மகிந்தவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே போன்ற கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் பிரதமர், தென்மராட்சி – மட்டுவில் வண்ணத்தி பாலத்திற்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்க ஏற்பாடாகியுள்ளது.