September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

24 மாவட்டங்களில் தொற்றாளர்கள் : இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது.

இன்றைய தினம் 314 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் இதுவரையில் 10,105 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டம் மாத்திரம் அதிலிருந்து தப்பியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று ஏற்படாத  மாவட்டம் கிளிநொச்சி என, கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலைய புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 4 வாரங்களில் இலங்கையில் 7000 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

4 வாரங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை

நான்கு வாரங்களில் கம்பஹா மாவட்டத்தில் 2,960 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,760 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பீசீஆர் பரிசோதனை என தெரிவித்து கொள்ளை

பொதுச் சுகாதார பரிசோதகர்களை போன்று, பீசீஆர் பரிசோதனை செய்யவேண்டுமென கூறி  வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத மூவர் பணம், நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கடவத்தை, மஹவ பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று  மாலை வீட்டுக்கு வந்த குறித்த நபர்கள், பீசீஆர் பரிசோதனை செய்யவேண்டுமென தெரிவித்து வீட்டில் இருந்தவர்களுக்கு தூக்க மாத்திரைகளை வழங்கியுள்ளனர்.

அதன் பின்னர் தமக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும், இன்று காலையிலேயே தாம் சுயநினைவுக்கு வந்தாகவும் அந்த வீட்டில் இருந்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அணியும் சீருடையை ஒத்த உடையிலேயே, அந்த நபர்கள் மூவரும் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் கொழும்பில் திருமண ஏற்பாடு

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர் ஒருவரின் மகனுடைய திருமணம் இன்று நடத்தப்பட இருந்த நிலையில் பொலிஸாரினால் அது இடை நிறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் அங்குச் சென்றவேளை மண்டபத்தில் 35 பேர் மட்டுமே இருந்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர்  கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேல் மாகாணத்தில் அமுலில் இருப்பதனால், திருமணம் உள்ளிட்ட பொது​ வைபவங்களை நடத்தமுடியாது.இருப்பினும் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயாவுக்கு பூட்டு

வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பூண்டுலோயா நகர வர்த்தக நிலையங்கள் இன்று  முதல் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூண்டுலோயா பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, வர்த்தக சங்கத்தினால் கடைகளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

157 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும்

மேல்மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் தெரிவுச் செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பும் 157 நிலையங்கள் திறந்திருக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 62 நிலையங்களும், கம்பஹா மாவட்டத்தில் 68 நிலையங்களும், களுத்துறை மாவட்டத்தில் 27 நிலையங்களும் திறந்திருக்கும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

சுகாதார பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா

கொழும்பு, ஜிந்துப்பிட்டியில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொரோனா

பெலியத்த கலகம பிரசேதத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பெலியத்த பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பில் கடமையாற்றிய ஒருவர் என்றும் அங்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை  உறுதியாகியுள்ளது.

அவர் கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு சென்றுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு அருகிலுள்ள சுமார் 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பெலியத்த பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கொட்டகலையில் மேலும் இருவருக்கு கொரோனா

கொட்டகலையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கொட்டகலை நகரிலுள்ள ஒருவருக்கும் கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொட்டகலை பகுதியில் 33 பேருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று  மாலை கிடைக்கப்பெற்ற நிலையில், இருவருக்கு  தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் விசேட வேலைத்திட்டம்

சிறைச்சாலைகளுக்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்படும் பட்சத்தில் செயற்பட வேண்டிய விதமும் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கேற்ப துரித நடவடிக்கை எடுக்குமாறு ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கைதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல், கைதிகளை வெளிவேலைகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,259 பேர் கைது

நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 1,259 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் 178 வாகனங்களுடம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் அவர் கூறியுள்ளார்.

ஞாயிறு சந்தை பதுளையில் நிறுத்தப்பட்டது

பதுளை ரயில் நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள ஞாயிறு சந்தையை  நடத்தாமல் இருக்க பதுளை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநகர சபையின் மேயர் பிரியந்த அமரசிறி தெரிவித்துள்ளார்.

ஆரையம்பதி ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக பூட்டு

ஆரையம்பதியில் அமைந்துள்ள பென்டைக்ஸ் ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக இன்று  முதல் 3 நாட்களுக்கு மூடி கிருமிநாசினி விசிறி சுத்தப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி மற்றும் மாவடிமுன்மாரியில் அடையாளம் காணப்பட்ட இரு கொரோனா தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்கள் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 3 ஆயிரம் பேர் தொழில் புரிந்து வரும் நிலையில், ஊழியர்கள் குறைக்கப்பட்டு பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டு ஆடைத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது

நேற்றும் கொழும்பில் அதிக தொற்றாளர்கள்

நாட்டில் நேற்று  இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இனங்காணப்பட்ட 586 பேரில் 209 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் 199 பேரும், யாழ் மாவட்டத்தில் 46 பேரும் பதுளை மாவட்டத்தில் 4 பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.