இலங்கை பெட்ரொலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எரிபொருளை கொண்டு செல்வதற்கான கட்டணத்தை 60 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்று தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சேவை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இது தொடர்பில் எரிசக்தி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் வாகனங்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நிற்பதை காணக் கூடியதாக உள்ளது.
இதேவேளை நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எரிபொருளுக்கான 42 மில்லியன் டொலர் பணம் இதுவரை திரட்டப்படவில்லை எனவும் 18 ஆம் திகதி அதனை செலுத்த எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கப்பலில் தலா 22,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் விமான எரிபொருள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதன்படி அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு தாமதம் ஏற்படுமாக இருந்தால் இன்னும் நெருக்கடி அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை சமையல் எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக எரிவாயு நிறுவனங்கள் நிறுத்தியுள்ள நிலையில், பல பிரதேசங்களில் மக்கள் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த வரிசை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதை காண முடிகின்றது.
இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் நிற்கும் எரிவாயு கப்பலுக்கு உரிய கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், இதன்படி இன்று முதல் எரிவாயுவை இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.