January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கை தொடர்பான பிரிட்டனின் பயண ஆலோசனை தவறானது”: பீரிஸ்

இலங்கை தொடர்பாக பிரிட்டன் விடுத்துள்ள பயண ஆலோசனையில் தவறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்த போதே பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக் காரணமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரிட்டன் வெளிவிவகார அமைச்சினால் பயண எச்சரிக்கை அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தவறானது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய கொவிட் தொற்றுநோயின் விளைவாக நாட்டின் சுற்றுலாத் துறை புத்துயிர் பெறத் தொடங்கியுள்ள மற்றும் அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வெளிநாட்டுப் பணம் தேவைப்படும் வேளையில், பயண ஆலோசனையில் தவறான தன்மைகள் நிலவும் பொருளாதார பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இலங்கையிலுள்ள நடைமுறை யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை தொடர்பான பயண ஆலோசனையை திருத்துமாறும் வெளிவிவகார அமைச்சர் பிரிட்டன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.