தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் நேரம் இதுவல்ல என்று முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் நெருக்கடியில் இருந்து மீண்டு, நாட்டை உயர்த்துவதற்காக அனைத்து தரப்புக்களுக்கும் இடையில் ஒரு தேசிய உடன்பாடே அவசியமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கிருளப்பனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சி வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், நெருக்கடியை தீர்க்க தவறினால் அடுத்த சில மாதங்களில் மக்கள் நாட்டை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடு பாதுகாக்கப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பாகவும் அனைத்துத் தரப்பினருக்கும் இடையில் வலுவான உடன்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.