
மின்சார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக மின் உற்பத்தியை முன்னெடுப்பதற்காக இந்தியாவின் ‘அதானி’ நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை பெற இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை உபகுழு அனுமதி வழங்கியுள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடாவான நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அடுத்த 6 ஆண்டுகளுக்குள் 5,000 மெகாவொட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக மின் உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில், அது குறித்து அமைச்சரவை உபகுழு ஆராய்ந்துள்ளது.
இதன்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மேற்கொள்ள ஆர்வமுள்ள முதலீட்டாளர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்துள்ள அமைச்சரவை உபகுழு, அதற்காக அதானி நிறுவனத்தை தெரிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.