அமெரிக்க டொலரின் பெறுமதி 260 ரூபா வரை அதிகரித்ததை தொடர்ந்து, இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஒருவருட காலமாக டொலரின் பெறுமதியை 202 ரூபா என்ற அளவில் நிலையாக பேணி வந்த மத்திய வங்கி, நேற்று முதல் அதன் பெறுமதியை 260 ரூபாவாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் டொலரின் விலை அதிகரித்ததை தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், எரிவாயு நிறுவனங்களும் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் விலையை 300 ரூபாவால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் கோதுமை மா உள்ளிட்ட மேலும் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கும் அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், குறித்த பொருட்களின் விலைகளும் பெருமளவு ரூபாவால் அதிகரிக்கும் நிலைமையே உள்ளது.