July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க விசேட சுகாதார நடைமுறைகள் அமுல்

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகளை செயற்படுத்துவதற்கு யாழ். மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி கூட்டம்  மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர்  தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் அங்கஜன் இராமநாதனும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது மாவட்டத்தில் கொவிட்  தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் குருக்களை தவிர்ந்த ஏனையோர் ஆலயத்துக்குள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அன்னதானம் மற்றும் ஏனைய ஆலய செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் ஒன்று கூடுகின்ற வர்த்தக நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வர்த்தக செயற்பாட்டை முன்னெடுக்கப்பட வேண்டும்.

மேலும் திருமண நிகழ்வுகளில்  50 பேர் மட்டும் கலந்துகொள்ள வேண்டும்.அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து திருமணம் மற்றும் ஏனைய வீட்டு நிகழ்வுகளை வீட்டிலேயே நடத்தவேண்டும்.

அதேபோல் பொதுப்போக்குவரத்து ஆசன ஒதுக்கீட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும். வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்வது மிக அவசியம்.

அங்காடி வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் அவர்களுடைய செயற்பாடுகளுக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய பொருட்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்வுகள் யாவும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

கல்வி நடவடிக்கையினை பொறுத்தவரையில் தனியார் கல்வி நிலையங்கள் குழு வகுப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரம் 1 இற்கான பாடசாலை அனுமதி நேர்முக பரீட்சைகள் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றது அதனையும் மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை பேணி  நடத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் நடவடிக்கைகளை பொறுத்தவரையிலே தொழிலுக்கு செல்பவர்கள்  தொழிற்சாலைகளில் தங்க வைக்கப்பட்டு  தொழில் புரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் அது பற்றி அறிவிக்க வேண்டும்.

இந்தத்  தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு புதிய விழிப்புணர்வு நடவடிக்கையினை  மேற்கொள்ளவும் இங்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமையினை உணர்ந்து,மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.