எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கையில் சகல அரச நிறுவனங்களுக்கும் சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சினால் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டு நிலைமையால், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார நெருக்கடி நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டே பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்தம் வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படவுள்ளது.
அத்துடன் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மற்றும் துர இடங்களில் இருந்து கொழும்புக்கு கூட்டங்களுக்காக அரச ஊழியர்கள் செல்வதை தவிர்த்துக்கொண்டு கலந்துரையாடல்களை வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச நிறுவனங்களில் பிற்பகல் வேளைகளில் குளிரூட்டி பாவனைகளை குறைத்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.