பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தில் மூன்றாவது சரத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியமாகும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை 12வது சரத்தில் உள்ள உத்தேச பிரிவு 26(2) அரசியலமைப்பின் 12(1) வது உறுப்புரைக்கு முரணாக இருக்குமென கருதுவதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்ட திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்மானம், உயர்நீதிமன்றத்தினால் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்மானம் தொடர்பில் சபாநாயகர் இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம், சட்ட மூலத்தின் 3 ஆம் சரத்துக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையானது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு (வருகை தராதவர்கள் உட்பட) குறையாதிருந்தாலொழிய அதனை சட்டமாக இயற்ற முடியாதென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சட்டமூலத்தின் 12வது சரத்தில் உள்ள உத்தேச பிரிவு 26(2) இன் ஏற்பாடுகள் திருத்தப்பட்டால், அது அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாக இருக்காது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.