January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்க 25 குழுக்கள்!

காணாமல் போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தால் மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் பிராந்திய அலுவலகள் நிறுவப்பட்டுள்ளதுடன், அப்பிராந்திய அலுவலகங்களுக்கு காணாமல் போனமை தொடர்பான 14,988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய முறையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காணாமல் போன ஆட்களின் உறவினர்களுக்கு அறிக்கைகளை வழங்கல் உள்ளிட்ட அதிக பணிகளை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.