January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படத் தயாராகும் சுதந்திரக் கட்சி!

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பாராளுமன்றம் நாளை கூடும் போது இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கடந்த பொதுத் தேர்தலின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டது.

இதன்படி அந்தக் கட்சி பாராளுமன்றத்தில் 14 ஆசனங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் 14 பேரும் அங்கு சுயாதீனமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பில் அவர்கள் நாளைய தினத்தில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தலில் 11 கட்சிகளை இணைத்துக் கொண்டு புதிய கூட்டணியில் போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி அரசாங்கத்திற்குள் அதிருப்தி நிலையில் இருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோரின் கட்சிகளை தமது கூட்டணியில் இணைத்துக்கொள்ள ஏற்கனவே சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.