எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் தலைதூக்கியுள்ள போதைப் பொருள் பிரச்சனையில் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், நம் தேசத்தை அழிப்பதற்காக போதைப் பொருள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடக்காவிட்டால், நம் பிள்ளைகள் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தமது பிள்ளைகள் குறித்து சில பெற்றோர் அவர்களது சிறு வயதில் அதிக கவனம் செலுத்துகின்ற போதிலும், அவர்கள் உயர் வகுப்புக்கு செல்லும் போது அவர்கள் மீதான கவனம் குறைந்துவிடுகிறது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிள்ளைகளை சிறு வயதைவிட அவர்கள் பெரியவர்களாக வளரும் போதே அவர்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே அவர்கள் இளைஞர்களாக வளர்ந்து நிற்கும் போது அவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரதும், பெரியோரதும் கடமையாகும்.
அவ்வாறு செய்யாவிடின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். எனவே நாம் எமது பிள்ளைகளை பாதுகாத்து தேசத்தை கட்டியெழுப்பி இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.