October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”46/1 பிரேரணை குறைபாடுகளைக் கொண்டுள்ளது”: ஜெனிவாவில் இலங்கை!

ஐநா மனித உரிமைகள் பேரவையில் 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டதொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கை தொடர்பான கலந்துரையாடலின் போதே பீரிஸ் இதனை தெரிவித்துள்ளது.

46/1 பிரேரணையில் 6 ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சியங்களை சேகரிக்கும் விடையத்தை கடுமையாக எதிர்ப்பதாக அமைச்சர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையை எதிர்க்கின்றோம் என்றும், அந்தப் பிரேரணை ஆதாரமற்ற விடயங்களை உள்ளடக்கியே தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

எமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எமது அரசாங்கத்தின் அமைப்புக்களின் மூலம் மனித உரிமைகளை உறுதிப்படுத்தி வருவதுடன், தீர்வுகளுக்காக உள்ளக பொறிமுறைகளில் நடவடிக்கை எடுத்து வருவதாககவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பேரவையில் சமர்பித்த இலங்கை தொடர்பான அறிக்கை பல்வேறு குறைபாடுகளை கொண்டவை என்றும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.