July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் நீதி மறுக்கப்படுகின்றது”: இலங்கை தொடர்பில் மிச்சேல் பச்லெட்!

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தொடர்ந்தும் நீதி மறுக்கப்படுகின்றது என்று இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது தனது அறிக்கையை வெளியிட்டு அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் நிலை அல்லது இருப்பிடத்தை அவசரமாக நிர்ணயம் செய்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், இழப்பீடு வழங்கவும் இலங்கை அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்கும், கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும், ஆழமான சட்ட, நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை அரசாங்கம் இன்னும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய நிலைமாறுகால நீதிக்கான நம்பகமான பாதை வரைபடத்தை உருவாக்கவில்லை என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் பற்றிய தொடர்ச்சியான அறிக்கைகள் தொடர்பில் தான் கவலையடைவதாகவும், பொலிஸ் தடுப்பு காவலில் இருக்கும் போது ஏற்படும் மரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.