கொரவலப்பிட்டி ‘யுகதனவி’ அனல்மின் நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல்செய்யப்பட்டிருந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த மனுக்கள் ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று ஆராயப்பட்ட போது அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யுகதனவி அனல் மின்நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அரசாங்கம் உடன்படிக்கையை கைச்சாத்திட நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில் இதனை சவாலுக்கு உட்படுத்தி 5 அடிப்படை உரிமை மனுக்கள் பல்வேறு தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் 27 பேரும், இலங்கை மின்சார சபை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 43 பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தன.