அரசாங்கத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கம் செய்வதற்கு அரசாங்கத்திற்குள் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வது தொடர்பில் அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைக்கும் வகையில் ‘முழுநாடும் சரியான பாதையில்’ எனும் தொனிப்பொருளில்நேற்று கொழும்பில் நிகழ்வொன்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் குறித்த அமைச்சர்கள் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கடுமையாக விமர்ச்சித்து உரையாற்றினர்.
இது தொடர்பில் குறித்த அமைச்சர்களுக்கு அரசாங்கத்திற்குள் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும், அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச உயர்மட்டம் எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.