January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”டக்சன் பியூஸ்லஸியின் மரணத்தில் சந்தேகம்”: விசாரணையை கோரும் செல்வம் எம்.பி!

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் மன்னாரைச் சேர்ந்த வீரர் டக்சன் பியூஸ்லஸியின் மரணத்தில் சந்தேகங்கள் உள்ளதாகவும், இது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியினால் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் நடைபெற்ற தொழில்சார் கழக மட்டப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த போது, அவர் தனது தங்கு விடுதியில் இருந்து பெப்ரவரி 26 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவரின் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இவ்வாறான நிலைமையில் இந்த மரணத்தில் சந்தேகங்கள் நிலவுவதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் பனங்கட்டு கொட்டு கிழக்கு கிராமத்தை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ், 2018 முதல் இன்று வரை இலங்கையின் தேசிய கால்பந்து அணி வீரராக இருந்து வருகிறார்.

தனது விளையாட்டு திறமையால் பல சாதனைகளை படைத்த ஓர் சிறந்த வீரன். இந்த விளையாட்டு துறையில் தன்னை முற்றும் முழுவதுமாக ஈடுபடுத்தி தன்னை வளர்த்துக் கொண்டு தனது மாவட்டத்திற்கும், தாய் நாட்டிற்கு புகழை தேடித் தந்தவர். தன்னை முழுவதுமாக கால்பந்திற்காக அர்ப்பணித்த வீரன் என்று செல்வம் அடைக்கலநாதன், வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதோர் சிறந்த விளையாட்டு வீரனின் அகால மரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மரணம் கொலையா? என்ற சந்தேகத்தையும் எல்லோரிடத்திலும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான ஓர் அகால மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஆவணப் படுத்துமாறு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என வெளிவிவகார அமைச்சரிடம் செல்வம் எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.