January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பொதுமக்கள் வாக்கெடுப்பு அவசியம்”: 5 கட்சிகள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம்!

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களுக்கு இவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

நீதி , பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் மீண்டும் மீண்டும் புறக்கணித்து வருவது தொடர்பிலும் ஐந்து கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன் வடக்கு, கிழக்கில் காணி அபகரிப்பு நடவடிக்கைகள், இராணுவமயமாக்கல், யுத்தத்தின் பின்னரான பெண்களின் நிலை, வலிந்து காணாமற்போனோர் விவகாரம் ஆகியன தொடர்பிலும் அவர்கள் அந்தக் கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இலங்கையில் நிலவும் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமாயின் சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பு அவசியமாகும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.