January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பாதகமான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்”: ஜெனிவாவில் பீரிஸ்!

ஐரோப்பாவில் நிலவுகின்ற மோதல் சூழ்சிலைகளினால் ஏற்படவிருக்கின்ற பாதகமான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரில் இன்று உரையாற்றுகையிலேயே பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

எமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அடிப்படை உரிமைகள், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எமது அரசாங்கத்தின் அமைப்புக்களின் மூலம் படிப்படியாக முன்னேறி, சமாதானம், பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் ஐநாவிடம் உள்ள கணிசமான நிபுணத்துவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நாங்கள் பயனடைந்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான எமது உள்நாட்டு செயன்முறைகளுக்கு ஐநா ஊடாக தொடர்ந்தும் நல்கப்படுகின்ற ஆதரவை மதிக்கின்றோம் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக எமது உள்நாட்டுக் கட்டமைப்பு மற்றும் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு அமைய, இன மற்றும் மத அடையாளம் மற்றும் அரசியல் சார்பு எதுவுமின்றி, எமது பிரஜைகள் அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை மேம்படுத்தி, பாதுகாப்பதை நாங்கள் தொடர்ந்தும் உறுதிசெய்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை சர்வதேச சமூகத்தின் அபிவிருத்தியடைந்து வரும் உறுப்பு நாடாக, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான எமது முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற தொற்றுநோய் மற்றும் ஐரோப்பாவில் நிலவுகின்ற மோதல் போன்ற நெருக்கடி மிகுந்த சூழ்சிலைகளினால் மேலும் ஏற்படவிருக்கின்ற பாதகமான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

உலகில் ஏனைய இடங்களைப் போலவே, பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம் என்றும், இதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுதல் மற்றும் விசாரணை ஆகியவற்றுக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், கருத்துச் சுதந்திரம் போன்ற ஜனநாயக சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் இலங்கை உறுதியாக நம்புகின்றது என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.