
எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி மார்ச் 2 ஆம் திகதி முதல் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடமும் பகல் – இரவு நேரத்தில் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பகல் நேரத்தில் 5 மணித்தியாலங்களும், இரவு நேரத்தில் இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்வெட்டு இடம்பெறும் நேரம், பிரதேசங்கள் தொடர்பான விபரங்களை இந்த இணைப்பில் பார்வையிடலாம்.
இதேவேளை நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால், போக்குவரத்து துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் பஸ் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்தால் பஸ் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.