
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ஏப்ரல் முதலாம் ஆம் திகதி வரையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட எழுத்துமூல சமர்ப்பணத்தை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் முன்வைக்கவுள்ளார்.
இதன்படி, இலங்கை குறித்த விடயம் மார்ச் 3ஆம் திகதி கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவிற்கு செல்லவுள்ளது.
இலங்கை குறித்த மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அதனை ஆராய்ந்துள்ளது. இதன்படி இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பேரவையில் பதிலளித்து உரையாற்றவுள்ளார்.
இம்முறை மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு நெருக்குதல்கள் அதிகரிக்கலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.