January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை”

நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இலட்சம் மகாவலி ரண்பிம காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, எம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையானது, இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளால் கிடைக்கப்பெறும் செலாவணி இழப்பு, இதற்கு ஒரு முக்கிய காரணமாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முந்தைய அரசாங்கங்கள் பெற்றிருந்த கடன்களை வட்டியுடன் செலுத்தவேண்டியுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைகள் தனது அல்லது தனது அரசாங்கத்தின் தவறுகளால் ஏற்பட்டவை அல்லவென்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நிலவும் சவால்களுக்கு முகங்கொடுக்க, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும், அரசாங்கமும் இணைந்துப் பணியாற்ற வேண்டிய தேவையை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, இடையூறு விளைவிக்கும் வேலைநிறுத்தப் போராட்டங்கள், பொய்ப் பிரசாரங்கள் போன்றவற்றை, எந்தவொரு பொறுப்பான தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.