இலங்கையில் இராணுவமயமாக்கல், இன, மத மற்றும் தேசியவாதம் என்பன ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைக்கின்றது என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சிறுபான்மை மக்களை சிரமப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மிச்செல் பச்சலெட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் இலங்கை அசமந்தப்போக்குடன் செயற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல் பொறிமுறையை செயற்படுத்துவதற்காக பூரண நோக்கத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவசரத் தேவையாக உள்ளதெனவும் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை தாம் ஏற்றுக்கொண்டாலும், இலங்கையின் உத்தேச திருத்தங்கள் சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு அமைய போதுமானதாக இல்லை எனவும் மிச்செல் பச்சலெட் குறிப்பிட்டுள்ளார்.