January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை: பிரிட்டனில் கைதான நபரிடம் விசாரணை

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பிரிட்டிஷ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரிட்டனின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின் 51 ஆம் பிரிவின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைதான குறித்த நபரை விசாரணையின் கீழ் விடுவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் நோர்த்தம்டன்ஷயரில் வசித்துவந்த 48 வயதான குறித்த நபர், பிரிட்டிஷ் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கையின் கீழ் கைதானார்.

பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்காகவும் தென்னிலங்கை ஊடகங்களுக்காகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து பணியாற்றிவந்த நிமலராஜன் 2000 ஆம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது படுகொலைக்கு நீதி வேண்டி சர்வதேச மட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்தன.

பிரிட்டிஷ் காவல்துறையின் விசாரணையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நிமலராஜனின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரிட்டனில் வாழ்வோரில் நிமலராஜனின் படுகொலை தொடர்பில் தகவல் அறிந்தவர்களை தங்கள் விசாரணைக்கு உதவுமாறு பிரிட்டிஷ் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

உலகில் எங்காவது போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் பிரிட்டனின் நீதி்-அதிகார எல்லைக்குள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டிஷ் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.