சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, கொழும்பில் வைக்கப்பட்டிருந்த மேலும் 45 கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை இன்றைய தினத்தில் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து இலங்கையின் தனியார் நிறுவனமொன்றின் ஊடாக, பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் என்ற போர்வையில் 2017ஆம் ஆண்டில் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் அடங்கிய 247 கொள்கலன்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இவற்றில் 130 கொள்கலன்கள் கட்டுநாயக்க பகுதியிலுள்ள நிறுவனமொன்றின் வளாகத்திலும், 111 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திலும் வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக நாட்டில் சுற்றாடல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வந்த நிலையில் அவற்றை மீண்டும் திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதி 20 கழிவுக் கொள்கலன்கள் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதுடன் அதனை தொடர்ந்து கட்டம் கட்டமாக மற்றைய கொள்கலன்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இதன்படி இறுதியாக எஞ்சியிருந்த 45 கொள்கலன்கள் கப்பலொன்றில் இன்று காலை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.