November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்த தலைமையில் சர்வதேச தாய்மொழித் தின நிகழ்வு

சர்வதேச தாய்மொழித் தினம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம், கல்வி அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கை சாரணர் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

தாய்மொழியைப் பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில், விழாவின் ஆரம்பத்தில் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

‘தாய், தாய்மொழி, தாய்நாடு’ என்பது இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் தொனிப்பொருளாகும். இந்த மூன்று விலைமதிப்பற்ற சொத்துக்களை பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை புதுப்பிப்போம் என்பதே இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் முக்கிய செய்தியாகும்.

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ‘தாய், தாய்மொழி, தாய்நாடு’ என்ற தொனிப்பொருளில் மூன்று தொகுதிகளாக நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 வெற்றியாளர்களுக்கு இதன்போது பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களும் பிரதமரிடம் இருந்து பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்தியா, பங்களாதேஷ், ரஷ்யா, மாலைதீவு மற்றும் பிரான்ஸ் நாட்டின் கலாசார அம்சங்கள் மற்றும் சிங்கள, தமிழ் பாடல்களின் மூலம் நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரெக் அரிஃபுல் இஸ்லாம் உள்ளிட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, உலக தொழிலாளர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான நிரந்தரப் பிரதிநிதி சிம்ரின் சின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.