April 17, 2025 15:44:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மீனவர்கள் 21 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை!

File Photo

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 21 பேருக்கு யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த ஜனவரி 31 ஆம் திகதி இந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு இன்று வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி, இன்றைய தினம் இவர்கள் மீண்டும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 வருட சிறைத் தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

இந்தத் தீர்ப்புக்கமைய இவர்கள் நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ளனர். குறிப்பிட்ட காலப்பகுதியில் இதே குற்றத்தை செய்தால் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படும்.

இதற்கமைய விடுதலை செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தினூடாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு  நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.