கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணம் முழுவதும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்குக்கு முன்னர் மேல்மாகாணத்தில் இருந்து பலர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊரடங்கு உத்தரவு தற்காலிகமானது என்பதனால் யாரும் மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டிருந்த போதும், நேற்றைய தினத்தில் பலர் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரதான வீதிகளின் மாகாண எல்லைப் பகுதிகளில் நேற்று காலை முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, வெளியேற முயற்சித்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட போதும், அதனையும் மீறி பலர் வெளி மாகாணங்களுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் இவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் விசேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மேல் மாகாணத்தை விட்டு அதிகளவானவர்கள் வெளியில் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லையென மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.