January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் மீதான வரியை நீக்கக் கோரும் எரிசக்தி அமைச்சர்!

எரிபொருள் மீது விதிக்கப்படும் வரியை நீக்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நிதி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாளொன்றில் 551 மில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவும், இதில் 367 மில்லியன் ரூபா எரிபொருள் மீதான வரியாகும் என்றும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமையில் வரியை நீக்கினால் நஷ்டத்தில் இருந்து ஓரளவு விடுபட முடியுமாக இருக்கும் என்று தான் நிதி அமைச்சரிடம் எழுத்துமூலம் கேட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடியால் மாத்திரமின்றி ரூபா இல்லாமையினாலும் இலங்கை எரிபொருள் பற்றாக்குறையை எதிர்நோக்கும் அபாயம் நிலவுகின்றது என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவ்வாறு விலை அதிகரிப்பதாக இருந்தால் முன்னறிவித்தல் எதுவும் இன்றி விலை அதிகரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.