இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் அரசியல் ஆவண வரைபொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாகவும் இதில் அந்த வரைபு இறுதி வடிவம் பெறும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக தயாரிக்கப்படும் ஆவணமானது இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அனைத்து கட்சி தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட தமிழக கட்சி தலைவர்கள், பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச நாட்டு அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சேர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் இந்த ஆவணம் தேசியரீதியான கலந்துரையாடல்களுக்காக நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளுக்கு வழங்கப்படவுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு வரைபு எழுதப்பட்டு வரும் நிலையிலேயே இந்த ஆவணத்தை தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
1954 (நேரு-கொத்தாவலை), 1964 (சிறிமா-சாஸ்திரி),1974 (சிறிமா-இந்திரா), ஆகிய ஆண்டுகளில் இலங்கை இந்திய அரசு தலைவர்கள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களின்படியும், இந்திய பிரதமர்களுக்கும், இலங்கை ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்படியும், இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் இந்திய அரசுக்கும் இருக்கின்ற கடப்பாடுகள் நல்லெண்ண அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்பார்ப்பாகும் என்றும் மனே கணேசன் கூறியுள்ளார்.