பாட்டியின் பாதுகாப்பில் இருந்த தனது 7 வயது மகனை கடத்திச் சென்ற குற்றக் கும்பல் உறுப்பினரான ‘ஹொரண நீலக’ என்பவர் வெள்ளம்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘ஹொரண நீலக’ என்பவர் சில தினங்களுக்கு முன்னர் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை வெட்டி காயமேற்படுத்திய பின்னர், அவரை பொலிஸார் தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில் படுகாயமடைந்திருந்த அவரின் மனைவி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அவர்களின் 7 வயது மகன் சந்தேக நபரின் மாமியாரின் பாதுகாப்பில் இருந்துள்ளார்.
இவ்வேளையில் இன்று காலை துப்பாக்கியுடன் வீட்டுக்குச் சென்ற சந்தேக நபர், அங்கு வானை நோக்கி சூட்டை நடத்தி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி தனது மகனை கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.